×

கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இறந்து கிடந்த மயில்

கொள்ளிடம்,ஜூலை 9: கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ஆண் மயில் ஒன்று திடீரென இறந்து கிடந்ததால் அதற்கான காரணம் என்னவென்று ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் தொடர்ந்து மரங்கள் உள்ளன. கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம், கீரங்குடி, கொன்னகாட்டு படுகை, மாதிரவேளூர், அளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலவகையான மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. வனத்துறைக்கு சொந்தமான இந்த பகுதிகளில் கடந்த பத்து ஆண்டுகளில் மயில்கள் இனப்பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொள்ளிடம் ஆற்றின் வலது மற்றும் இடது கரைகளையொட்டி உள்ள கிராமங்களில் உள்ள அடர்ந்த மரப்பகுதிக்குள் மயில்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி கிராமத்திலிருந்து பாலூரான்படுகை கிராமம்வரை 15 கிலோமீட்டர் தூரத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் அதிக எண்ணிக்கையில் மயில்கள் காணப்படுகின்றன. ஆற்றங்கரை ஓரமுள்ள கிராமங்களில் இந்த மயில்கள் செல்லும்போது அப்பகுதியில் உள்ள நாய்களால் மயில்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இதில் ஒரு சில மயில்கள் இறக்கும் வாய்ப்பு உள்ளது. சில மயில்கள் எதிர்பாராத விதமாக பலியாகி வருகின்றன. இந்நிலையில் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே ரயில் பாலத்தை ஒட்டி ஆற்றங்கரை சாலை ஓரம் நேற்று ஒரு ஆண்மயில் இறந்து கிடந்தது. இந்த மயில் எப்படி இறந்தது என்று தெரியவில்லை. இதேபோல் கொள்ளிடம் பகுதியில் மயில்கள் அடிக்கடி இறந்து வருகின்றன. தேசிய பறவையான மயில் இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இறந்து கிடந்த மயில் appeared first on Dinakaran.

Tags : Peacock ,Kollidam river ,Kollidam ,Dinakaran ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி